Mar 15, 2009

பெண் ஜென்மம்

ஈன்று உன்னை
புறந்தந்து
இயலாமல் மயங்கி
கிடந்தேன்..
அடியே இவளே
ஆறாவதும் பொண்ணு
என்று யாரோ
சொல்லக்கேட்டு
ஆனந்தம் வரவில்லை
அழுகை முட்டுதடி..
குடிகார உன் அப்பன்
குரல்வளை மிதிப்பானோ
குடிகெடுக்கும் அவனாத்தா
கூப்பாடு வைப்பாளோ..
கண்ணில் மைதீட்டி
கருஞ்சாந்து திலகமிட்டு
பொன்னும் மணியும்
பூட்டி
பூமுடிக்க வழியுமில்லை...
வெள்ளி மணி குலுங்க
வீதிவழி நீ நடக்க
நின்னு நான் ரசிக்க
நேரமது வாய்க்கவில்லை...
அடுத்து ஒரு ஜென்மத்தில்
உன் அப்பனாக
நான் வந்தால்
நிச்சயம் உன்னை
காப்பேன்
நீடூழி வாழ வைப்பேன்...
வளர்க்க பெண் வேண்டும்
வாழப் பெண் வேண்டும்
படைக்க பெண் வேண்டும்
பின் படுக்க பெண் வேண்டும்...
வறட்டு ஆண் ஜென்மத்துக்கு
வாரிசாக மட்டும்
அறவே பெண் வேண்டாம்...
கண்ணு குளம் ஆச்சே
கை கால் மரமாச்சே
கடைசி பால் நீ குடிக்க
மார்பும் விஷம் ஆச்சே...
இறுக்கி அணைத்துக்கொள்ள
விழி ஈரம் கொட்டுதடி
சிறுக்கி மக நீ குடிக்க
கள்ளிப்பால் சொட்டுதடி..



No comments: