Mar 7, 2009

சுனாமி நினைவுகள்..

கடலே
உன் நெடிய
கரைகளில் வரிசையாய்
எங்கள் கலங்கள் அன்று
எங்கள் பிணங்கள் இன்று....
நாங்கள்
உன் அலைகள் நடுவே
வயிற்றுக்காக
மீன் பிடிக்க
வலை வீசினோம்.........
நீயோ
எங்கள் குடில்கள் நடுவே
உயிர் குடிக்க
பாசக்கயிறு வீசினாய்...
இருந்த வீடுகளை
இடித்தும்
வாழ்ந்த மனிதர்களை
புதைத்தும்
நீ தேடியதென்ன..?
கொடிய தாகத்திலும்
ஒரு குவளைகூட
குடித்ததில்லை
உன் நீரை நாங்கள்...
உன் எத்தனைநாள்
தாகத்திற்கு
இத்தனை ஆயிரம்
உயிர் குடித்தாய் நீ...?
உன் பரந்த நீர்பரப்பின்
உப்புச் சுவை
போதாதென்று
எங்களின் பலகோடி
கண்ணீர் துளிகளையும்
சேர்த்துக் கொண்டாய்....
தான் விளையாண்ட
இடமென்று உன் கரைகளை
காட்டினார் தந்தை அன்று..
காட்ட தந்தையுமில்லை
பார்க்க மகனுமில்லை இன்று..
என்றாவது வரும்
உன் கோரப்பசிக்கு உயிர்கள்தான்
உணவென்றால்
உன்னையார் தாய் என்றது..?
அலைகளுக்குள் அதிசயங்கள் நிறைத்து
அன்றாடம் எங்களுக்கு
வாழ்வளித்த நீயே
அலைகளால் ஒரு அஸ்தமனம்
நிகழ்த்தியது ஏன்..?
கண்ணீரோடு உன் கரையில்
தொலைத்த உறவுகளை
தேடி அழும்
குழந்தைகளுக்கு
நீ பதில் சொல்லவேண்டாம்
மௌனமாய் இரு..
அதிசயங்கள் நிறைந்தது கடல்
என்பதற்க்காக
இன்னும் ஒருமுறை
கரைகளை அனாதைகளால் நிரப்பிவிடாதே
கடலே

மௌனமாய் இரு..





No comments: