Apr 4, 2009

தேர்தல் வியாபாரம்...

அம்மா தாயே
என்பதற்கும்
தாய்மார்களே பெரியோர்களே
என்பதற்கும்
பெரிதாய் வித்யாசமில்லை...
முன்னது வயிற்றுக்கு
பின்னது வசதிக்கு..
உங்கள் வீட்டு பிள்ளை
என்று உருகுவார்கள்
உடம்பை வளைத்து
கையை கூப்பி
தொழுவார்கள்...
திருவிழா முடியும் வரைதான்
தேரோட்டம் சாமிக்கு
என்பது தெரியவேண்டும்
உங்களுக்கு...
ஏனெனில்
உங்கள் வீட்டு பிள்ளையை
மறுமுறை
தரிசிக்க ஐந்து ஆண்டுகளாகும்
வேறு பிள்ளை
வந்து விட்டால்
மறுபடியும் முதல் பிள்ளை
மறைந்து போய்விடும்...
காலையில் வரப்போகும்
விடியலுக்கு காத்திராமல்
விளக்கை தேடி அலையும்
உங்கள் பலவீனம்
அவர்களின் பலம்...
கையில் இருப்பது
கோழி மயிரென்று
கண்மூடி சுகமாய்
காது குடைகிறீர்கள்
அது பிரம்மாஸ்திரம்
என்பது தெரியாமல்...
துண்டு பழத்திற்கு
குச்சியை குரங்கிடம்
கொடுத்து
நீங்கள் குட்டிக்கரணம்
போடுகிறீர்
குரங்குகள் முன்...

No comments: