சிறு தூறல்
தொடங்கியிருந்த
ஒரு மாலை நேரம்
ஒரு தொடர்வண்டிப் பயணம்
புறநகர் நோக்கி..
பயணசீட்டு பெற்று
காத்திருந்து
இருக்கை தேடி அமர்கையில்
எதிரே ஒரு காதல் ஜோடி..
வருடல் களிலும்
தொடுதல்களிலும்
பற்றத் தொடங்கியது
காதல் தீ..
கவனித்தது அநாகரீகம்
எனலாம் எவரேனும்
கண்ணெதிரே நடப்பதை
காண மறுக்க
குருடல்ல நான்...
சிறு தூறல்
கனமழையாகிய
ஒரு நேரத்தில்
உடமைகளை
இருக்கையில் விட்டு
இருவரும் நகர்ந்தனர்
படியை நோக்கி...
வாரி இறைத்தது
மழை தனது
திவலைகளை இருவர் மீதும்...
ஒருவர்பின் ஒருவராக
நின்று மழையின்
ஸ்பரிசத்தில் மெய்மறந்த
இருவருக்குமிடையே
நுழைய முயன்று
தோற்ற அவமானத்தில்
தரையில் விழுந்து மடிந்தன
மழைத்துளிகள்..
எல்லோரையும்
குளிர வைத்துக்கொண்டிருந்த
மழை
அவர்களை மட்டும்
உஷ்ணப்படுதிக் கொண்டிருந்தது..
சுற்றம் மறந்து
காதல் எனும் மேடையில்
ஆடிக்கொண்டிருந்த இருவரும்
காமம் எனும் படிக்கட்டுகளில்
மெல்ல
கீழிறங்கத் தொடங்கினர்..
பல ஜோடி கண்கள்
இமைக்க மறுத்தன
இரு ஜோடி கண்கள்
திறக்க மறந்தன . ..
எல்லோர் பார்வைகளும்
அவர்களை மட்டுமே
பார்த்துக்கொண்டிருக்க
எதையுமே பார்க்க
முடியாமல் அவர்கள்...
வளர் பருவத்தில்
இருந்த இரு சிறுமிகள்
அந்த அண்ணனும் அக்காவும்
என்ன செய்கிறார்கள்
என்று புரியாமல்
மிரட்சியோடு பார்க்க
அவசரமாய் அவர்களை
அந்தபக்கம் திரும்ப வைத்தார்
அம்மா..
எனது நிறுத்தம் வந்து
இறங்கி நடக்க தொடங்கி
நெடுநேரமாகியும்
கண்முன்னே அவர்கள்...
காதல் மயக்கம்
அவர்கள் இருவரையும்
பலபேருக்கு
காட்சிப் பொருளாக்கியதை
உணரவில்லையே...?
நவீன ஊடகங்கள்
ஒரு தலைமுறையின்
மானத்தையும் பண்பையும்
வேரறுத்து விட்டதா..?
வீட்டுக்குள் நடக்கவேண்டியவை
வீதியில் எல்லோர்முன்னும்
என்றால்
ஆடை துறந்து அனைவரும்
மிருகமாகும் நாள்
அருகில் வருகிறதா.....?
அன்று ஒருநாள்
நன்கு உடுத்திய
நாகரீக மனிதன் ஒருவன்
ஒரு மதுக்கடையின்
வாசலில்
ஒரு நாயைபோல்
விழுந்து கிடக்க கண்டேன்
போதையில்..
எனக்கு இவர்கள் இருவரும்
அவனும் ஒன்றாகவே
தெரிந்தார்கள்
நெடுநேரம் வரையில்......
No comments:
Post a Comment