Dec 2, 2010

பிள்ளை நிலா - 9

உனக்கு மழையை தெரியும்
ஆனால் மழையின்
பெயர் தெரியாது...
கைகள் நீட்டி
மழைத்துளிகள் பிடிக்கவும்
அண்ணார்ந்து வானம் பார்த்து
மழைத்துளிகள்
உன்மேல் பட்டு தெறிக்கவும்
வடிந்து வரும்
மழை நீரில் குதித்து
விளையாடவும்
மிகவும் பிடிக்கும் உனக்கு...
ஓரிடம் நில்லாமல்
துள்ளித்திரியும் நீ
அரிதாய் சில நேரங்களில்
ரசிப்பதுண்டு
மணிக்கணக்கில் மழையை
நம்வீட்டு கதவின்
இடைவெளிகளில்...
என்ன பேசியது
விட்டு விட்டு பெய்து
உன்னை விளையாட்டு காட்டி
சிரிக்க வைக்கும் மழை
உன்னிடம்...
உன்னை ரசிக்க மழை
மழையை ரசிக்க நீ
உங்கள் இருவர் ரசித்து
மெய்மறக்க நான்
என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
உங்கள் உலகத்தில்...

No comments: