Aug 15, 2011

விதவை

எதை இழந்தாய்
இத்தனை சோகம்
உன்கண்ணில்
கணவனையா
இல்லை வாழ்க்கையா?

மனைவிகள் மரித்துப்போன
கணவர்கள் யாரையும்
கண்டதில்லை உன்போல்
எதை இழந்தாய்
இத்தனை சோகம்?

உன் வாழ்க்கை
பாதைகள் வெள்ளைநிறத்திலும்
உன் கனவுகள் மட்டும்
கருப்பு வெள்ளை
நிறத்திலும் மாற
ஒரே நாளில்
எதை இழந்தாய்
இத்தனை சோகம்?

இருபுறம் எரியும்
மெழுகினை போல
இதென்ன கோலம்
கண்ணீர் துளிகளை
சுண்டிவிடு உன்
சுட்டுவிரலால்...
எதை இழந்தாய்
இத்தனை சோகம்?

காலத்தின் பக்கங்கள்
யாவருக்கும் சமம்தான்
அதை கால்வைத்து
கடந்துவா..
நிறங்களை வைத்து
உன்னை நீ
அடையாளப் படுத்திக்கொள்ள
காக்கை குருவியல்ல
கடந்து போ..

உன்னால்
சாதனைகளாக
காத்திருக்கின்றன
பல சம்பவங்கள்....
எதை இழந்தாய்
இத்தனை சோகம்?

No comments: