கடலின் மடியிலிருந்து
வந்த மென் காற்று
இதமாய் வருடி
பின் எடுத்துப் போனது
கவலைகளை தன்னோடு....
கோபத்தில் கொந்தளிக்கின்றன
அலைகள்
கடல் சீண்டி
சில்மிஷம் செய்கிறது
காற்று ....
ஏன் என்னை
எழுதவில்லையென்று
கேட்டது
அவளைப்பற்றி எழுத
உட்காரும் பொழுதெல்லாம்
காகிதம் திருடிப்போகும்
காற்று ....
கால்கள் ஒட்டிவந்தன
மணல்துகள்களை
கடலின் நினைவாய் ...
அதை மறுபடியும்
கரைசேர்க்கும் காற்று...
மரத்தின் பூக்கள்
உருவிப்போட்டது
அவளின் துப்பட்டா
திருடிச்சென்றது
மரத்தடியில் தூங்கியவன்
தலையில் பழங்கள்
பிடுங்கிப்போட்டது
சிரிக்கிறது காற்று
புகார்செய்யும் ஆளின்றி ...
கோவிலின் விபூதிவாசம்
பள்ளிவாசல் பக்கமாய்
எடுத்துப்போகும்..
பள்ளிவாசலின் பாங்கை
கோவிலின் பக்கம்
ஒலிபரப்பும்
மதம்பிடிப்பதில்லை
காற்றுக்கு ...
தனிமையின் இரவுகளில்
துளிர்க்கும்
பயத்தின் வியர்வைகள்...
அதை துடைத்தபின்
கைபிடித்துக்கொண்டு
கூடவே வரும் காற்று...
வரட்டுமா
வரட்டுமா
என்று கேட்கும் காற்று...
வெட்கத்தில்
பட படக்கும்
ஜன்னல்கள்....
வானம் மரங்களுக்குள்
ஒளித்துவைக்கிறது
காற்றை
தலையாட்டி வெளியே
போவென்கின்றன
மரங்கள் காற்றை...
அழுத்தியும் பின்
கடித்தும் விளையாடி
உடைத்த பலூனுக்கு
அழும் குழந்தை
தனக்காக அழவில்லை
என்ற வருத்தமுண்டு
காற்றுக்கு...
அணைக்கப் போகிறேன்
அணைக்கப் போகிறேன்
என மிரட்டும் காற்று
அதனிடம்
அழுது மன்றாடும்
மெழுகுவர்த்தி.......
கிச்சு மூடிக்கொண்டே
இருக்கிறது காற்று
விடாமல்
சிரித்துக் கொண்டிருக்கின்றன
இலைகள் மரங்களில்...
காதல் எனும்
மந்திரத்தால்
கட்டப்பட்டிருக்கும்
காமம் எனும் பேய்
அதை
தட்டி எழுப்பும்
கடலின் காற்று....
ஜன்னல்கள் உடைக்கிறது
கதவை மோதி மூடுகிறது
மடித்த துணிகள்
கலைத்துப்போடுகிறது
பாத்திரங்கள் உருட்டுகிறது
குழந்தைகள் ஓய்வெடுக்கும்பொழுது
காற்று செய்கிறது
குழந்தையின் வேலையை....
குப்பைமேடுகளில் குப்பையகவும்
தோட்டங்களில் பூக்களாகவும்
அடுக்களையில் சாப்பாடாகவும்
மாறி விடுகிறது
தந்திரக்கார காற்று....
No comments:
Post a Comment