Aug 29, 2011

உங்கள் கைபிடித்து
நடந்துவந்த நியாபகங்கள்
இன்றும் நிழலாடுகின்றன
மனதில்...

கண்மாய் குளியல்கள்
மூலிகை மருந்து
அதிகாலை சைக்கிள்
பயணம் என நான்
பாதிவழியில்
பறிகொடுத்தவைகள்
ஏராளம்....

தவறுகளின் பெயரில்
காலையில் நான்
வாங்கிய அடிகளுக்கு
மதியமே நிறைந்துவிடும்
என் கால்சட்டை பைகள்
தின்பண்டங்களால்...

மழைநாட்களும்
பண்டிகைகளும்
திருவிழாக்களும்
எப்படியும்
கொண்டுவந்துவிடுகின்றன
 உங்கள் நினைவுகளை இன்றும்....

சின்னஞ் சிறுவயதில்
காலத்தால் பறிக்கப்படும்
தந்தை எனும் உறவின்
பிரிவு  வலி
தங்கிவிடுகிறது
நிரந்தரமாய் நெஞ்சுக்குள்....

தாத்தா எங்கே
எனக்கேட்டதும்
உங்கள் நிழற்படத்தை
கைகாட்டும் என் மகனை
கைகாட்டுகிறது
உங்கள் நிழற்படம்
அப்பா எங்கே என்ற
என் கேள்விக்கு பதிலாய்...

***************
கிழித்தெறிய மனம்வரவில்லை
அலமாரிக் கதவின்
பொம்மை படங்களை
இன்னும் வாழ்கின்றன
சென்ற குடித்தனக்காரர்களின்
குழந்தைகள்....
*******************
கிருஷ்ண ஜெயந்தியன்று
குழந்தையும் கடவுளும்
ஒன்றாய் சாப்பிடப்போவதாக
ஒரு ஒப்பந்தம் அவர்களுக்குள்..
கடவுள் வரும்முன்பே
காலியாகத் தொடங்கின
பழங்களும் பலகாரங்களும்
பசியோடு பார்த்துக்கொண்டிருந்தார்
படத்தில் கிருஷ்ணன்...
**********************
கடவுளும் குழந்தையும்
ஒன்றாகவே உறங்கச்செய்கிறார்கள்
குறுப்பு செய்து முடித்த
களைப்பில் குழந்தை
படைத்தது முடித்த
களைப்பில் கடவுள்....
******************
நினைத்த உடனே
விமானம் கப்பலாகவும்
கப்பல் பறவையாகவும்
மாறிவிடுகின்றன
குழந்தைகள் கைகளில்....
*****************
குழந்தையின் சிரிப்பில்
தென்பட்டது போக
மீதி நேரங்களில்தான்
தென்படுகிறார் இறைவன்
ஏழையின் சிரிப்பில்....
*************************
பலூன்கள்
பஞ்சுமிட்டாய்கள்
ராட்டினங்கள் என
எந்த திருவிழாக்களும்
களைகட்டிவிடுவதில்லை
ஒரு குழந்தையின்
வருகைக்கு முன்...

*********************

பதினைந்து தேதிக்கு
முன் முன்னோராகவும்
பதினைந்து தேதிக்கு
பின் சனியனாகவும்
தெரிகிறது
மாதச் சம்பளக்காரனின்
வீட்டின் முன்
கரையும் காக்கை

****************


No comments: