Aug 29, 2011

பலூன் பலூனோய்......

பச்சை நிற கரடியும்
மஞ்சள் நிற நாயும்
சிவப்பு நிற பூனையும்
ஆரஞ்சு நிற முயலும்
பறந்துகொண்டிருக்கும்
அவன் காதுகள்
உரசியபடி...

ஸ்ஸ்ஸ் என்ற
சப்தத்துடன் நீளும்
எதோ ஒன்று
சில முறுக்கல்களிலும் 
முடிச்சுகளிலும் 
புது வடிவம்பெறும்
நிமிடங்களில்
அவன் படைக்கும்
கரங்களில்...

கோரிக்கைகளும்
எதிர்பார்ப்புகளும் சுமந்து
காத்திருக்கின்றன குழந்தைகள்
அவன் கவனம்வேண்டி
ஊதும் காற்றிலும்
உருட்டும் கைகளிலும்
ஒளிந்திருக்கின்றன
அவன் வித்தைகள்....

குதூகலத்துடன் ஓடும்
குழந்தைகளின் கைகளில்
இன்னும் 
உறவாடிக் கொண்டிருக்கின்றன 
அவனின் வண்ண வண்ண
படைப்புகள்...

ஆனாலும் அவை
உடைய உடையத்தான்
ஓடிக்கொண்டிருக்கமுடியும்
அவன் வயிறும் வாழ்க்கையும்....

No comments: