Aug 30, 2011

பிள்ளை நிலா..

கூடத்திலிருந்த உன்னையும்
அடுக்களையிருந்த மாம்பழத்தையும்
காணவில்லை ஒருநாள்..
நீண்ட தேடுக்குபின் 
இரண்டும் கிடைத்தது 
கட்டிலினடியில்...
உடல் முழுவதும்
மாம்பழச் சாயம்
பூசிக்கொண்டிருந்த
உன்திருட்டுச்சிரிப்பின் அழகில்
நெஞ்சத்தின் கடைசி
விளிம்புவரை
வழிந்தோடி நிறைந்தது
மாம்பழத்தின் சாறு...


(2 )

எங்களுக்கு மட்டுமே
தெரியும்
ப்பா.....
என்று நீ
வேறு வேறு
ஒலிஅதிர்வுகளில் அழைக்கும்
குரலுக்கு
சாப்பிடவேண்டும்
வெளியில் போகவேண்டும்
யாரோ அடித்தார்கள்
எதுவோ பிடிக்கவில்லை
இப்படி பல அர்த்தங்கள்
இருப்பது....
புரிந்துகொண்ட நாங்கள்
தருகிறோம் உன் தேவையை 
புரிந்து கொண்டு நீ
என்று தரப்போகிறாய்

உன் மழலைப் பேச்சை....

**************
புத்தகங்களிலும் நாள்காட்டிகளிலும்
வெகு ஆர்வமாய் விழுகின்றன
உன் கண்கள்...
அதன் படங்களிலும்
எழுத்துக்களிலும்
உன் பிஞ்சுவிரல்கள்
எதையோ தேடுகின்றன...
என் கைகள்பற்றி 
தேர்ந்தடுத்த சிலவற்றின்மீது
விரல்கள் வைத்து
சொல்லெனச் சொல்கிறாய்...


நீ சொல்லேன்
எனச்சொல்லும் எனக்கு 
வார்த்தைகளுக்கு பதிலாய்
கிடைப்பது புன்னகை மட்டுமே....

*****

சட்டை போட்டுகொண்டு
ஒருமுறை
கண்ணாடி போட்டுகொண்டு
ஒருமுறை
தொப்பி போட்டுக்கொண்டு
ஒரு முறை என
ஒரு நாளில் பலமுறை
நீ ரசிப்பதுண்டு
கண்ணாடியில் உன் அழகை
எல்லோரும் ரசிக்கும்
உன் அழகை
நீ மட்டும் ரசிக்கக்கூடாதா
என்ன...?
**************
மணிச் சத்தத்தோடு
வரும் வண்டிக்காரன்
கொண்டுவருவது ஐஸ்கிரீம்
எனத்தெரியாது உனக்கு
நெடு நாட்கள் வரையில்...
அதை நீ தெரிந்துகொண்ட
பிறகு
யார் வீட்டிலாவது
சாமிக்கு  மணியடித்தால்
கூட அதை  புரியவைக்க
போராட்டம் எங்களுக்கு....

****
உனக்கும் எனக்கும்
உன் அம்மாவுக்கும் என
மூன்று ஐஸ்கிரீம்கள் வாங்கினோம்
ஒரு நாள்...
உன் இருகைகளாலும்
எங்கள் கைகள் பற்றிக்கொண்டு
எங்கள் ஐஸ்க்ரீமை
சாப்பிடத் தொடங்கினாய் நீ
உன் ஐஸ்கிரீம் கரைவது பற்றி
கவலையின்றி...
உன் கைகளிலும்
முகத்திலும் வழிந்தோடிய
ஐஸ்க்ரீமின் குளுமை
நிறைத்தது எங்கள்
வயிற்றையும் மனதையும்
அன்று...

*************
கடிகாரத்தின் முட்களைப்
போலவே இருக்கும்
தூக்கத்தில் உன் அசைவுகள்
படுக்கையை சுற்றி...
இடமும் வலமுமாய்
மாறி மாறி
என் கழுத்தில் முகத்தில்
மார்பில் என
நீ தலைவைத்தும் கால்வைத்தும்
துயில்வாய்...
நீ தூங்க விழித்துக்கொண்டிருக்கும்
என் தூக்கம்...

**************

ஐந்து வருடங்களாய்
கடந்துகொண்டே  இருக்கின்றன
விமானங்கள் கணக்கின்றி
நம் வீட்டை
அத்தனையும்  ஓடிச்சென்று
கவனிக்கிறாய் வெகு ஆர்வத்துடன்...
அவை எதனை கடந்தன
என நீயும்
நீ எத்தனை கணக்கிட்டாய்
என அவைகளும்
கணக்குவைத்துக் கொண்டதுண்டா
எப்பொழுதேனும்...?

****
முற்றாத தென்னங் குரும்பைகளையும்
பழுக்காத சீத்தாப்பழ பிஞ்சுகளையும்
நீ இளநீராகவும் பழமாகவும்
எண்ணிக்கொள்கிறாய்....
அவை பொறுக்கி எடுத்துவந்து
வெட்டித் தரச்சொல்லி நீ
செய்யும் அடம்
இன்னும் வேகமாய்
கற்றுத்தரச் சொல்கிறது
இந்த உலகை உனக்கு...


No comments: