அன்று
இருவர் சுமந்ததும்
இங்குதான்
ஈரைந்து மாதங்கள்
என் வயிறு
வலித்ததில்லை...
அன்று
இருவர் உறங்கவும்
இடம் கொடுத்தது
இங்குதான்
என் மடி
வலித்ததில்லை...
அன்று
இருவர் உண்ணவும்
பால் கொடுத்தது
இங்குதான்
என் மார்புகள்
வலித்ததில்லை...
இன்று
வலிக்கிறது பிள்ளாய்
எனக்கு...
நீ அவன் வீட்டிலும்
அவன் உன் வீட்டிலும்
சாப்பிடச்சொல்லி விரட்டி
இன்று என் கால்
வலிக்கிறது..
நான் அன்பை ஊட்டிய
வாயின் அவச்சொல்
கேட்டு
இன்று என் காதுகள்
வலிக்கிறது...
நான் பொட்டிட்டு
அழகுபார்த்த முகங்கள்
எனைக்கண்டு புறந்திரும்ப
இன்று என் மனம்
வலிக்கிறது..
நான் நடக்கவைத்து
அழகுபார்த்த கால்கள்
என் நடுநெஞ்சில் மிதிக்க
இன்று என் உயிர்
வலிக்கிறது...
வேண்டாம் பிள்ளாய்
வேண்டாம்
வலி தாங்க முடியவில்லை
இந்தக் கிழவியால்...
எனக்கு மகன்களாய்
இருக்க முடியாது போயினும்
மனிதர்களாக நீங்கள்
வரக்கூடுமென்று
இன்னும் ஒரு ஜென்மம்
காத்திருக்கும் என்
கருப்பையும் கண்களும்
ஈரத்துடன்..
No comments:
Post a Comment