Aug 21, 2011

அந்தப் பெரிய
நதியின் கரையில்
ஒரு நெடிய ஆலமரம்
அதிலிருந்து
உதிர்ந்தது ஓர் இலை
ஒருநாள்
உலகம் சுற்றிகாண......

தரை தொட்டால்
வலிக்குமோ என்று
தவித்து வந்தது
இலை
அதை தாங்கிக்கொண்டன
நதியின் அலைகள்....

நதியில் ஓர்
படகாய் மாறி
நெடு நேரம்
நீந்திக்களித்தது
இலை
ஆற்று நீரை எல்லாம்
வாரித் தெளித்தது...

நீந்திவரும் மீன்கள்
நெருங்கி வரும் பூக்கள்
நெளிந்து வருடும்
நாணல்கள் என
புதுமையாகத்தான் இருந்து
இலையின் பயணம்.....

நெடுநாள்
பயணத்தின் முடிவில்
கடலைச் சேர்ந்தது
நதி ஓர்நாள்..
அச்சம் கொண்டது
அலைகள் கண்டு
இலை இப்போது ....


திரும்பவே முடியா
ஒருவழிப் பயணம்
தான் வந்தது
என்றறியா இலை
வந்தவழியே
மீண்டும் மரத்தின்
கிளைசேரத் துடித்தது....

கோர அலைகள்
குதறி எடுத்தன இலையை
அலைகளின் பிடியில்
சுழன்று சுழன்று
கடலின் மடி சேர்ந்தது
இலை...

இலையின் கண்முன்னே
நிழலாடியது இப்போது
அன்று மரத்தின்
பூவோடும் கணியோடும்
உறவாடிய நாட்கள்..............

No comments: