Aug 30, 2011

பிள்ளை நிலா...

சட்டென கண்மறைக்கும்
கோபத்தின் வெளியீடு
அழவைத்துவிடும் உன்னை...
எந்த சமாதானமும்
எடுபடாத அந்த நேரத்தில்
ஒரு முத்தம் மட்டுமே
உன் கோரிக்கையாக இருக்கும்...
கட்டித் தழுவி உன்னை
முத்தமிடும் நேரத்தில்
உன் கண்ணீரின் சுவைக்கு
கரிக்கும் இதயம்
குற்ற உணர்ச்சியில்
கண்ணீருடன்.....

******

ரயிலை பிடிக்க
போகிறவனின் அவசரத்தைப்போல
சிலநேரம் நீ
பட்டும் படாமல் கொடுத்துவிட்டு
ஓடிப்போகும் முத்தம்...
அப்பாவுக்கு ஒரு பெரிய
முத்தம் கொடுடிச்செல்லம்
என்றதும்  மாறி மாறி
நீ பொழியும் முத்தமழை...
மும்முரமாய் நீ
விளையாடிக்கொண்டிருக்க
உன்னை மிரட்டி
நானே  வாங்கிக்கொள்ளும் முத்தம்
என ஒவ்வொரு முத்தங்களும்
இரு சின்னஞ்சிறு உதடுகளுக்கும்
ஒரு கன்னத்துக்கும் இடையிலான
பரிமாற்றமல்ல
அவை என் ஆன்மாவினால்
மட்டுமே வாசிக்கப்படக்கூடிய
உன் உதடுகளால்
என் உயிரில்  எழுதப்படும் கவிதைகள்...

No comments: