Oct 16, 2011

முதிர் கண்ணி..



கண்ணீரால்

அழிக்கப் பட்டுக்கொண்டே

இருக்கின்றன

இளமையும் அழகும்

கவனிப்பாரின்றி...



சுகமாய் தூக்கிச்

சுமந்த தோள்கள்

தூரமாய் சுவரோரம்

இறக்கிவைத்து விட்டன

சுமை தங்க முடியாமல்..



கண்ணாடியின் பிம்பங்களில்

லயித்திருக்க முடிவதில்லை

அன்ன்மைக்காலமாய்

இல்லாத அழகைக் கண்டு

அனிச்சையாய் விரல்கள்

தேடுகின்றன

தொலைதூர கானல் நீரை..



சகவயது பெண்களின்

மேடிட்ட கர்ப்பிணி வயிறு

பெரும்பாறை கற்கள்

எறிகிறது மனதில்...

வாசி



வசிக்கும் விரல்களின்றி

தனித்துக் கிடக்கிறது

ஒரு வீணை

படரும் தோள்கள்

இல்லத் தனிமையில்

கண்ணீரில் மிதக்கிறது

ஒரு கொடி

வெகு நாட்களாய்...



********



லட்சங்களில்லாத

ஒரு வீட்டின்

ஜன்னல் கதவுகளுக்குள்

கரைந்துகொண்டிருக்கிறது

ஒருத்தியின் இளமை

பேராசை மனிதர்களால்...



பகுத்தறியும் மிருகங்கள்

முகர்ந்தலைகின்றன

பணமிருக்கும்

மணப்பெண் வீடுகளை..



உணர்வுகளும்

உள்ளமும் நசுக்கப்பட்டு

ரணமாய் கிடக்கும்

ஒரு அபலையின்

நெஞ்சம்

நெடுநாட்களாய்

காத்துக்கிடக்கிறது

ஆதரவாய் பற்றிக்கொள்ளும்

ஒரு தேவனின் கரங்களுக்காக...



*************

No comments: