Oct 22, 2011

பூக்களில்லாத பூக்கள்...


********************************

நான்கு சுவர்களின்

எல்லைக்குள் ஒளிந்துவிடுகிறது

நகரத்து பூக்களின்

அழகும் வாசமும்...



பெரிய சுவர்களின்

பூந்தொட்டிகளில்

குழந்தையைப்போல்

கைநீட்டுகின்றன

இறக்கிவிடசொல்லும்

பூச்செடிகள்...



நுகரவும் சூடவும்

படைக்கப் பட்டனவாம்

பூச்செடிகள்

அவை தொடாதீர்

பறிக்காதீர் என்ற

எச்சரிக்கைகளுடன்

ஒளிந்திருக்கின்றன

வேலியின் பின்னே...



காகித பூக்கள்

குலுங்கும் நந்தவனங்கள்

தெரிகின்றன

இயற்கை மறந்த

மனிதனின் செயற்கை

தோட்டங்களில்...



குப்பிகளில்

நுகர்ந்து பின்

தேடி அலைகின்றோம்

ஆணும் பெண்ணுமாய்

பூக்களின் வாசத்தை...



பூவைத்து பூவையான

பெண் இன்று

டாட்டுவிலும் சிலநேரம்

ஆடைகளிலும் மட்டும்

வேண்டுமென்கிறாள்

பூக்களை...



யாருக்காக

என்பது தெரியாமலே

பூத்து பூத்து

உதிர்ந்துகொண்டே

இருக்கின்றன பூக்கள்மட்டும்

காரணங்களின்றி...



பாலிதீன் கவர்களால்

கழுத்து நெரிக்கப்பட்டு

கடைகளில் காத்துக்கிடக்கும்

சில கொத்துப் பூக்கள்மட்டும்

இன்னும் நேசிக்கின்றன

நமது அருகாமையை...

No comments: