Dec 4, 2011

நகரத்தின் மழைநாட்கள்....

நகரத்தின் மழைநாட்கள்....


****************************

நனைந்த சிறகுகள்

உலர்த்திக்கொள்ள

கிளைதேடும் பறவைகள்

வரவேற்கின்றன

நிமிர்ந்த

செல்போன் கோபுரங்கள்...



மரங்கள் இல்லாத

மரங்களில்

அசைந்தாடுகின்றன

இலைகளில்லாத

இலைகள்....

பூக்களில்லாத

பூக்களை

வாரிச் செல்கிறது

மழைநீர்

சேருமிடம் தெரியாமல்....



சளிபிடித்தால்

என்னசெய்வது

என்ற கவலையின்றி

மழையில் நனைகின்றன

குடைகள்...



துணிகளில்லாத

மொட்டைமாடி

கொடிகளில்

அணிவகுத்து உதிர்கின்றன

மழைத் துளிகள்...



நனையாத

ஓரிடம் தேடி

அலைகின்றன

கால்கள்...

மெதுவாய்

மேகம் கலைத்து

வெளிவந்த சூரியன்

போ.. போ

என்கிறது மழையை.....

தொலைந்த மனிதர்கள்....

தொலைந்த மனிதர்கள்....


*********************************

கலைந்த அலமாரியின்

அடுக்குகளில்

சிதறிக் கிடக்கின்றன

தொலைந்த மனிதர்களின்

நினைவுகள்....



எதையோ தேடும்

நிமிடங்களில்

எடுக்கப்பட்டு விடுகின்றன

எதிர்பாராமல்

யாரோ ஒருவரின்

நினைவுகள்....



பழைய நாட்குறிப்புகளும்

புகைப்படங்களும்

புரட்டப்படுகின்றன....

வெளிப்படுகிறது

யாரோ ஒருவருக்கான

புன்னகையும்

கண்ணீர்த் துளிகளும்....

Dec 1, 2011

காதல் கலைஞன் ஷாஜகான்

காதல் கலைஞன் ஷாஜகான்- 1

***************************** ***************



இட்டபெயர்

இளவரசர் குர்ரம்

இயற்பெயராய்

பெற்றோர்...



களம் பல கண்டு

படை பல வென்றதால்

பட்டப்பெயர்

இளவரசர் ஷாஜகான்....





வெண்பளிங்கு

கற்கள் கொட்டி

அவன் எழுதிய

காதல் கவிதை

நூற்றாண்டுகள் கடந்தும்

வாசிக்கக் படுகிறது

யமுனைக் கரையில்...





ஒரு கல்லறையை

கலைக் கூடமாக்கி

புதைந்திருக்கும்

தன் காதலிக்கு

புகழுடம்பு அளித்தவன்.....





அன்று

ஆக்ராவின் சிம்மாசனம்

அதிகம் ருசித்தது

உறவுகளின் உதிரம்தான்...



உரிமைப் பசியின்

உயிர் தாகம்

உதிரத்தால் நிறைந்தது...

ஷாஜகானின் காலடி

உடன்பிறந்தோர்

தலைகளால் மறைந்தது...





மன்னனாய்

அவன் மணிமுடி

தரிக்கும் முன்பே

அவன் மணமுடி

தரித்திருந்தது

ஓர் பொற்சிலை...





கண்களால் ஆட்சிசெய்யும்

அரண்மனை அழகிகள்

நடத்தும் கண்காட்சியில்

கண்ணாடிப் படைப்புகளை

விற்றுக் கொண்டிருந்தது

ஒரு கலைப் படைப்பு...



கடைகளையும் இடைகளையும்

நோட்டம்விட்ட

இளவரசரின் இதயத்தை

ஈர்த்து ரசமாய்

பூசிக்கொண்டது

அந்த சொர்கத்தின் கண்ணாடி...



அதன் பெயர்

அர்ஜுமான் பானு

பின்னாளில் மும்தாஜ்....





கடைகுவிந்த

கண்ணாடிப் பொருட்கள்

பிரதிபலித்துக் காட்டின

அப் பேரழகியின்

பிம்பத்தை...





காதல் கலைஞன் ஷாஜகான் - 2

**********************************************



இமைக்க மறந்த

இளவரசன் இதயத்தில்

ஈட்டி எரிந்தன

அவள் கண்கள்...



ஈராயிரம் எறும்புகள்

மெதுவாய் ஊர்ந்து

சேர்க்கத் தொடங்கின

அவன் இதயத்தில்

அவளின் நினைவுகளை

மெதுவாய்...



விலைகேட்ட இதயம்

காதல் வியாபாரம்

முடித்திருக்க..

கண்ணாடிக் குவளை

ஒன்றின் விலைகேட்டார்

இளவரசர்...



விலைகேட்ட

இளவரசனுக்கு

வலைவிரித்தன மும்தாஜின்

கண்கள்

இது கண்ணாடியல்ல

வைரமென்று...



தெரியுமே

உன் கைபட்டால்

கண்ணாடிகூட வைரம்தானே

என உருகினார்

இளவரசர்...



இரு இதயங்களின்

பிரதிநிதிகளாய்

இடமாறிக்கொண்டன

குவளையும் பணமும்...



மன்னனின் ஆசியோடு

மனமேடை கண்டது

ஷாஜகானின் காதல்...



பல காதல்கள்

சம்பவமாய்

முடிந்துவிடுகின்றன

மனமேடை வரையில்..

சில காதல்களோ

சரித்திரமாகின்றன

பிண மேடைவரையில்...



பல்வேறு பாகங்களால்

போர்த்தியிருந்தாலும்

உள்ளிருக்கும்

உயிர் ஒன்றுதான்

உடலுக்கு....



அழகிகள் அலைமோதும்

அந்தபுரத்தில் கூட

ஷாஜகான் எனும்

உடலைப் போர்த்தியிருந்தது

மும்தாஜ் எனும் உயிர்....



திருமண பந்தம்

அந்த தெய்வீக காதலின்

இரண்டாவது அத்தியாயம்....





முத்து முத்தாய்

பதிமூன்று மகவுகள்

பெற்று முடித்தும்

முடிந்துவிடவில்லை

ஷாஜகானின் காதல்...

பதிமூன்று பிள்ளைகள்



நத்தை போல்

சுமந்தே திரிந்தான்

ஷாஜகான்

தன் காதலையும்

காதல் மனைவியையும்

போர்க்களங்களுக்கு கூட...





காதல் கலைஞன் ஷாஜகான் - 3

**********************************************



போர் முகாமில்

மும்தாஜின்

இதழ் ரசம்

குடித்த கையோடு

களத்தில் எதிரிகள்

உயிர் ரசம்

குடித்தான்

ஷாஜகான்.....



காதலும் வீரமும்

இரு கண்களாயின

ஜகானுக்கு...



ஜூன் 1963

ஏழாம் நாள்

அந்த காதல்

மலர்த் தோட்டத்தை

மத யானையாய்

நெருங்கியது விதி...





பதினான்காம்

மகவை ஈன்ற

மும்தாஜ் எனும்

முழு நிலவை

ஜன்னி என்னும் கிரகணம்

தீண்டியது...



துடித்த மனைவியை

தூக்கியனைத்து

கண்ணீர்விட்டு

கதறினான் ஷாஜகான்...



அவன் கரங்கள்

பற்றியபடியே

அவன் கண்முன்னே

கலைந்தது மும்தாஜ்

எனும் நிலவு

கனவாய்....



மும்தாஜ் எனும்

உயிர் பறவை

ஷாஜகான் எனும்

கூட்டைவிட்டு

வெகுதூரம் பறந்திருந்தது...



மன்னனின்

கண்ணீர்த் துளிகள்

நிலமெங்கும்

தீட்டின

மும்தாஜின்

அழகு முகத்தை....



வார்த்தைகள் இல்லாத

மௌனத்தில்

முழுகிக் கிடந்தான்

வருடங்களில் இன்பம்

தொலைத்த ஷாஜகான்....



காதலின் நினைவுகள்

கண்ணீரானது

கண்ணீரின் நினைவுகள்

கற்பனையானது...

கற்பனைகள்

நிஜங்களாய் நிமிர்ந்தன

மன்னனின் மனதில்...



இடைவேளை இல்லா

மும்தாஜின் நினைவுகள்

அளவீடு இல்லா

அழகுடன் உருவெடுத்தது

மன்னனின் மனதில்...



புதைக்கப்பட்டு

மாதங்களான

மும்தாஜின் பூத உடல்

பூ உடலாய்

வந்திறங்கியது

யமுனைக் கரையில்...



தொடங்கியது

ஷாஜகானின் காதலின்

மூன்றாம் அத்தியாயம்

ஒரு சுபநாளில்...



நீரின் துளிகளை

பாலில் பிரித்தெடுக்கும்

அன்னமானான் அரசன்...



சிறந்த கலைஞர்தேடி

நாடெங்கிலும்

உலகெங்கிலும்

நடந்து கொண்டுவந்தனர்

நிபுணர்களை

யமுனையின் நீரோடும்

ஆக்ராவிற்கு...



நிழலின் வடிவாய்

நிறைந்து கிடந்த

தாஜ்மகால்

நிஜமாய் வளர்வது கண்டு

நீந்திக் களித்தன

யமுனையின் மீன்கள்...





காதல் கலைஞன் ஷாஜகான் - 4

***********************************************



தாஜ்மஹாலை

கற்பனை செய்தவன்

பூமியிலிருந்து வரவில்லை

இந்த வரைபடம்

சொர்க்கத்திலிருந்து

வந்தது என்றான்

மன்னன்...



ஆம் மும்தாஜ்

எனும் சொர்க்கத்திலிருந்து

வந்தது...



முத்துக்களையும்

ரத்தினங்களையும்

பொதித்தான்

தாஜ்மஹால் சுவற்றில்

அவன் மனதில்

பொதிந்துகிடக்கும்

மும்தாஜ் எனும்

உயரிய வைரத்தின்

நினைவாய்....



இருபது ஆண்டுகள்

உழைக்க உழைக்க

மெல்ல

எழுந்து நின்றது

அந்த காதல் அதிசயம்....



இப்படியும் காதலிக்க

எவனிருக்கிறான்

இந்த உலகில்

என்ற ஆச்சர்யத்தை

மனதில் விதைக்க...



பின்னாளில்

சிறைக் கம்பிகளுக்குப்பின்

உயிர்விட்ட ஷாஜகான்

கடைசியாய்

பார்த்தபடி

இறந்துகிடந்தான் தாஜ்மஹாலை.....



ஈடுசெய்ய முடியா

அந்த உலகக் காதலனின்

நினைவுகள் சுமந்தபடி

நீந்தி வருகின்றன

யமுனையின் அலைகள்...



தாஜ்மஹாலின்

வெண்பளிங்கு மேனி

வருடி

பின் மெதுவாய்

நகர்ந்துபோகிறாள் யமுனை...



அந்த மாபெரும்

காதல் வரலாற்றுக்கு

தன் அலைகளால்

சலாம் செய்தபடி...

Nov 27, 2011

வா நண்பனே.. நான் மரம் அழைக்கிறேன்






வா

உன் கூரிய

கோடரியின் முனைகள்

குறிவைக்கட்டும் என்

நடு நெஞ்சை....



வைரம் பாய்ந்ததுதான்

என்தேகம் ஆனாலும்

வலிக்கப் போவதில்லை

உன் கோடரிக்கு...



மழை எடுத்துப் போகாமல்

நான் மறித்துவைத்த

மண் வளங்கள் எத்தனை...?



அளவெடுக்க முடியாமல்

நான் அள்ளிக் கொடுத்த

ஆக்ஜிசன் புதையல்கள்

எவ்வளவு...?



இலை கொடுத்தேன்

மலர் கொடுத்தேன்

காய் கொடுத்தேன்

கனி கொடுத்தேன்

இறுதி மிச்சம்

என் உயிர்தான்

வா தருகிறேன்...



உன்னால் உணர

முடியாது போனாலும்

எனக்கும்

உயிரும் வலியும்

உண்டென்பது தெரியுமா

நண்பனே உனக்கு....?



முடிந்தவரையில்

வீழ்த்திவிடு எனை

ஒரே வீச்சில்..

வலியில்லாத மரணமேனும்

நீ எனக்களித்த

வாழ்நாள் உபகாரமாக

இருக்கட்டும்...



வா நண்பனே..

பம்பரம்


***********

சாட்டையின் நூல்

கொண்டு ஆடும்

பம்பரங்கள் பாரீர்..



சாய்ந்தாடும் ஒன்று

சரிந்தாடும் ஒன்று

தரையில் நில்லாது

சதிராடும் ஒன்று...



ஓயும் காலம்

என்றொன்று உண்டென

உணராத வரையில்

ஆடிக் கொண்டுதானிருக்கும்

பம்பரங்கள்

இங்கொன்றும்

அங்கொன்றுமாய்.....

------------------------------------------

இரவுப் பணியாளன்...

---------------------------------

பறவைகள் இரைதேடி

திரும்பும் மாலையில்

ஆந்தைகள் இரைதேட

கிளம்பும் நள்ளிரவில்

தொடங்கும் எங்கள்

பணி நேரம்...



வாழப் பணம்தேடினோம்

அன்று

பணம்தேட வாழ்கிறோம்

இன்று...



எங்கள் தூக்கம்

திருடிக்கொண்ட இரவை

பழிவாங்க

பகலில் தூங்கிக்

கழிக்கிறோம்...



எங்கள் தடாகங்களில்

தாமரைகள்

நள்ளிரவில் பூக்கும்...

அல்லிமலர்களோ

அதி காலைக்கு

பின்னரே கண்விழிக்கும்...



அம்மா அப்பாவை

அணைத்து உறங்குவதாய்

கற்பனை

செய்துகொள்கின்றன

தலையணை அணைத்து

உறங்கும் எங்கள்

வீட்டு குழந்தைகள்...



ஊடலும் கூடலும்

இன்பமும் துன்பமும்

ஒத்தி வைக்கப்படுகின்றன

வார விடுமுறை

நாட்களுக்கு...



எல்லோரைப் போலவும்

எங்களுக்கும்

கனவுகள் வருவதுண்டு

தூக்கத்தில்...

பலிக்கின்ற கனவே

ஆனாலும்

பகல் கனவுதான்

எங்களுக்கு...

Nov 20, 2011

அதை முந்திச்


சென்றுகொண்டே இருக்கின்றன

பல வாகனங்கள்....



உணர்ச்சியின்றி பார்த்து

பின் முகம் திருப்பியபடி

கடந்து போகின்றனர்

பாதசாரிகள்....



அது யாராய் இருக்கும்

ஆணா பெண்ணா

குழந்தையா...?

என்று மனதால்

நினைக்கக் கூட

நேரமின்றி நகரும்

மனிதர்களிடையே....



தனக்காக உதிர்ந்த

கண்ணீர் துளிகள்

எதுவென்று அறியாமல்

பூக்கள் உதிர்த்தபடி

செல்கிறது

நகரத்து மனிதனின்

இறுதி ஊர்வலம்...





-----------

எப்படியும் பறித்துவிடுவது

என்ற முடிவில்

எம்பிக் குதிக்கிறாய்...

காணாத அழகைக்

கண்ட வெட்கத்தில்

உதிர்ந்து

உன் காலடி விழுந்தன

பூக்கள்...

**************

நீயிட்ட வண்ணக்

கோலம் கலைத்தது

அந்த மழை

அதை நான் வெறுத்தேன்...



சிவப்பு மஞ்சள்

என உன் விரல்தொட்ட

வண்ணங்களை

என் வீட்டில் விட்டுப்போனது

மழைநீர்

மன்னிப்பாய் மழையே...

******************

Nov 12, 2011

பிள்ளைநிலா...

வந்ததும்


வீட்டுக்கார கிழவி

என்னைத்தானே பார்ப்பாள்

என்ற அச்சத்தில்

கூடத்தின் சுவர்கள்

கலர்பென்சில்

கிறுக்கல்களுடன்...



இரண்டு சக்கரங்கள் இல்லாமல்

நான் எப்படி ஓடுவதாம்

என்ற கோபத்தில்

கார் பொம்மை..



பல்லில்லாத கிழவியைப்போல்

தொலைகாட்சியின்

ரிமோட் பொத்தான்களின்றி....



தும்பிக்கையில்லாத யானை

இறக்கை இல்லாத வாத்து

குடலில்லாத கரடி

என எத்தனையோ

ஜீவராசிகள் உனக்கு பயந்தபடி

நம் வீட்டில்..



ஓவியன் மருத்துவன்

பொறியாளன் சமையல்காரன்

சண்டைக்காரன்

என உன் அவதாரங்கள்

மாறிக்கொண்டிருக்கின்றன

அறிவிப்புகளின்றி

நொடிக்கொருமுறை...



நீ தூங்கியபின்

ஓய்வெடுத்து உனக்குமுன்

விழித்துக்கொள்கிறது தயாராய்

வீடு..

கருகிய காதல் சுவடுகள்...

மெழுகுவர்த்தி போன்றதுதான்


நம் காதல்

சுடுகிறது தவிக்கிறது

பின்

கண்ணீர் சிந்துகிறது

காற்றில்...


அணைத்துக்கொள்ளும்

உத்தேசம் இல்லை

உன்னிடம்

அணைந்துவிடும்

முடிவும் இல்லை

என்னிடம் ஆனாலும்

எரிந்து கொண்டுதானிருக்கிறது

இன்னும் மெழுகுவர்த்தி...



காதல் வலியில்

மெழுகின் கண்ணீர் மட்டும்

அறியப்படுகிறது

தீயின் வெப்பம் தாண்டி

தெரிவதில்லை

திரியின் கண்ணீர்துளிகள்...



முடிந்த காதலின்

அடையாளங்களாய்

காணக்கிடைக்கலாம்

மெழுகின் மிச்சங்கள்

நாளை...



எனைமட்டும்

திரியாய் மாற்றித்

தீய்த்துவிட்ட காரணம்

தெரியாது காற்றில்

புகையாய் அலைகிறது

என் ஆன்மா

தோழி...

Oct 22, 2011

பூ என்பர்


எளிதாய் முகர்ந்து

பின் கசக்கி எறிந்துவிடலாம்

என்று...



தேன் என்பர்

தேனீக்களை ஏமாற்றி

எளிதில் சுவைத்துவிடலாம்

என்று..



கொடி என்பர்

நேசமாய் படர்ந்து

பின் உறவை அறுத்துவிடலாம்

என்று..



கனி என்பர்

சுவைத்து முடித்து

மிச்சம் தூர வீசிவிடலாம்

என்று..



நிலவு என்பர்

ரசிக்கும் வரை

இரவில் வந்து போய்விடலாம்

என்று...



மான் என்பர்

எளிதில் வேட்டையாடி

பின் வீழ்த்திவிடலாம்

என்று...



மயில் என்பர்

அழகிய தோகை

உருவி பின் துரத்திவிடலாம்

என்று...



புகழ்ச்சியும் போதைதான்

என்பதை தெரிந்துகொள்

பெண்ணே

இகழ்ச்சியின் இலக்குகளை

எளிதில்

தகர்த்துவிடலாம் நீ

நாளை.....

பூக்களில்லாத பூக்கள்...


********************************

நான்கு சுவர்களின்

எல்லைக்குள் ஒளிந்துவிடுகிறது

நகரத்து பூக்களின்

அழகும் வாசமும்...



பெரிய சுவர்களின்

பூந்தொட்டிகளில்

குழந்தையைப்போல்

கைநீட்டுகின்றன

இறக்கிவிடசொல்லும்

பூச்செடிகள்...



நுகரவும் சூடவும்

படைக்கப் பட்டனவாம்

பூச்செடிகள்

அவை தொடாதீர்

பறிக்காதீர் என்ற

எச்சரிக்கைகளுடன்

ஒளிந்திருக்கின்றன

வேலியின் பின்னே...



காகித பூக்கள்

குலுங்கும் நந்தவனங்கள்

தெரிகின்றன

இயற்கை மறந்த

மனிதனின் செயற்கை

தோட்டங்களில்...



குப்பிகளில்

நுகர்ந்து பின்

தேடி அலைகின்றோம்

ஆணும் பெண்ணுமாய்

பூக்களின் வாசத்தை...



பூவைத்து பூவையான

பெண் இன்று

டாட்டுவிலும் சிலநேரம்

ஆடைகளிலும் மட்டும்

வேண்டுமென்கிறாள்

பூக்களை...



யாருக்காக

என்பது தெரியாமலே

பூத்து பூத்து

உதிர்ந்துகொண்டே

இருக்கின்றன பூக்கள்மட்டும்

காரணங்களின்றி...



பாலிதீன் கவர்களால்

கழுத்து நெரிக்கப்பட்டு

கடைகளில் காத்துக்கிடக்கும்

சில கொத்துப் பூக்கள்மட்டும்

இன்னும் நேசிக்கின்றன

நமது அருகாமையை...

Oct 20, 2011

மரணமே மரணமே

மரங்களில்


பூக்களும் இலைகளும்

கனிகளும் தொங்க

பார்த்திருக்கிறேன்

கண்கள் நனைகிறதே

இதென்ன காட்சி...



இதயம் இணைந்தது

உடல்கள் இணைந்தது

உயிரும் இணைந்தது

மரணம்தான்

இதன் சாட்சி...



புள்ளும் புழுவும்

காதல் வளர்க்க

இடமிருக்கும் இப்

பரந்த உலகில்

உங்கள் காதல் வாழ

இடமில்லையா..?



மரணமே மரணமே

இந்த காதலை

மண்ணில் சாய்த்தாய்

உன்னில் ஈரமில்லையா...?