Nov 27, 2011

பம்பரம்


***********

சாட்டையின் நூல்

கொண்டு ஆடும்

பம்பரங்கள் பாரீர்..



சாய்ந்தாடும் ஒன்று

சரிந்தாடும் ஒன்று

தரையில் நில்லாது

சதிராடும் ஒன்று...



ஓயும் காலம்

என்றொன்று உண்டென

உணராத வரையில்

ஆடிக் கொண்டுதானிருக்கும்

பம்பரங்கள்

இங்கொன்றும்

அங்கொன்றுமாய்.....

------------------------------------------

இரவுப் பணியாளன்...

---------------------------------

பறவைகள் இரைதேடி

திரும்பும் மாலையில்

ஆந்தைகள் இரைதேட

கிளம்பும் நள்ளிரவில்

தொடங்கும் எங்கள்

பணி நேரம்...



வாழப் பணம்தேடினோம்

அன்று

பணம்தேட வாழ்கிறோம்

இன்று...



எங்கள் தூக்கம்

திருடிக்கொண்ட இரவை

பழிவாங்க

பகலில் தூங்கிக்

கழிக்கிறோம்...



எங்கள் தடாகங்களில்

தாமரைகள்

நள்ளிரவில் பூக்கும்...

அல்லிமலர்களோ

அதி காலைக்கு

பின்னரே கண்விழிக்கும்...



அம்மா அப்பாவை

அணைத்து உறங்குவதாய்

கற்பனை

செய்துகொள்கின்றன

தலையணை அணைத்து

உறங்கும் எங்கள்

வீட்டு குழந்தைகள்...



ஊடலும் கூடலும்

இன்பமும் துன்பமும்

ஒத்தி வைக்கப்படுகின்றன

வார விடுமுறை

நாட்களுக்கு...



எல்லோரைப் போலவும்

எங்களுக்கும்

கனவுகள் வருவதுண்டு

தூக்கத்தில்...

பலிக்கின்ற கனவே

ஆனாலும்

பகல் கனவுதான்

எங்களுக்கு...

No comments: