Dec 1, 2011

காதல் கலைஞன் ஷாஜகான்

காதல் கலைஞன் ஷாஜகான்- 1

***************************** ***************



இட்டபெயர்

இளவரசர் குர்ரம்

இயற்பெயராய்

பெற்றோர்...



களம் பல கண்டு

படை பல வென்றதால்

பட்டப்பெயர்

இளவரசர் ஷாஜகான்....





வெண்பளிங்கு

கற்கள் கொட்டி

அவன் எழுதிய

காதல் கவிதை

நூற்றாண்டுகள் கடந்தும்

வாசிக்கக் படுகிறது

யமுனைக் கரையில்...





ஒரு கல்லறையை

கலைக் கூடமாக்கி

புதைந்திருக்கும்

தன் காதலிக்கு

புகழுடம்பு அளித்தவன்.....





அன்று

ஆக்ராவின் சிம்மாசனம்

அதிகம் ருசித்தது

உறவுகளின் உதிரம்தான்...



உரிமைப் பசியின்

உயிர் தாகம்

உதிரத்தால் நிறைந்தது...

ஷாஜகானின் காலடி

உடன்பிறந்தோர்

தலைகளால் மறைந்தது...





மன்னனாய்

அவன் மணிமுடி

தரிக்கும் முன்பே

அவன் மணமுடி

தரித்திருந்தது

ஓர் பொற்சிலை...





கண்களால் ஆட்சிசெய்யும்

அரண்மனை அழகிகள்

நடத்தும் கண்காட்சியில்

கண்ணாடிப் படைப்புகளை

விற்றுக் கொண்டிருந்தது

ஒரு கலைப் படைப்பு...



கடைகளையும் இடைகளையும்

நோட்டம்விட்ட

இளவரசரின் இதயத்தை

ஈர்த்து ரசமாய்

பூசிக்கொண்டது

அந்த சொர்கத்தின் கண்ணாடி...



அதன் பெயர்

அர்ஜுமான் பானு

பின்னாளில் மும்தாஜ்....





கடைகுவிந்த

கண்ணாடிப் பொருட்கள்

பிரதிபலித்துக் காட்டின

அப் பேரழகியின்

பிம்பத்தை...





காதல் கலைஞன் ஷாஜகான் - 2

**********************************************



இமைக்க மறந்த

இளவரசன் இதயத்தில்

ஈட்டி எரிந்தன

அவள் கண்கள்...



ஈராயிரம் எறும்புகள்

மெதுவாய் ஊர்ந்து

சேர்க்கத் தொடங்கின

அவன் இதயத்தில்

அவளின் நினைவுகளை

மெதுவாய்...



விலைகேட்ட இதயம்

காதல் வியாபாரம்

முடித்திருக்க..

கண்ணாடிக் குவளை

ஒன்றின் விலைகேட்டார்

இளவரசர்...



விலைகேட்ட

இளவரசனுக்கு

வலைவிரித்தன மும்தாஜின்

கண்கள்

இது கண்ணாடியல்ல

வைரமென்று...



தெரியுமே

உன் கைபட்டால்

கண்ணாடிகூட வைரம்தானே

என உருகினார்

இளவரசர்...



இரு இதயங்களின்

பிரதிநிதிகளாய்

இடமாறிக்கொண்டன

குவளையும் பணமும்...



மன்னனின் ஆசியோடு

மனமேடை கண்டது

ஷாஜகானின் காதல்...



பல காதல்கள்

சம்பவமாய்

முடிந்துவிடுகின்றன

மனமேடை வரையில்..

சில காதல்களோ

சரித்திரமாகின்றன

பிண மேடைவரையில்...



பல்வேறு பாகங்களால்

போர்த்தியிருந்தாலும்

உள்ளிருக்கும்

உயிர் ஒன்றுதான்

உடலுக்கு....



அழகிகள் அலைமோதும்

அந்தபுரத்தில் கூட

ஷாஜகான் எனும்

உடலைப் போர்த்தியிருந்தது

மும்தாஜ் எனும் உயிர்....



திருமண பந்தம்

அந்த தெய்வீக காதலின்

இரண்டாவது அத்தியாயம்....





முத்து முத்தாய்

பதிமூன்று மகவுகள்

பெற்று முடித்தும்

முடிந்துவிடவில்லை

ஷாஜகானின் காதல்...

பதிமூன்று பிள்ளைகள்



நத்தை போல்

சுமந்தே திரிந்தான்

ஷாஜகான்

தன் காதலையும்

காதல் மனைவியையும்

போர்க்களங்களுக்கு கூட...





காதல் கலைஞன் ஷாஜகான் - 3

**********************************************



போர் முகாமில்

மும்தாஜின்

இதழ் ரசம்

குடித்த கையோடு

களத்தில் எதிரிகள்

உயிர் ரசம்

குடித்தான்

ஷாஜகான்.....



காதலும் வீரமும்

இரு கண்களாயின

ஜகானுக்கு...



ஜூன் 1963

ஏழாம் நாள்

அந்த காதல்

மலர்த் தோட்டத்தை

மத யானையாய்

நெருங்கியது விதி...





பதினான்காம்

மகவை ஈன்ற

மும்தாஜ் எனும்

முழு நிலவை

ஜன்னி என்னும் கிரகணம்

தீண்டியது...



துடித்த மனைவியை

தூக்கியனைத்து

கண்ணீர்விட்டு

கதறினான் ஷாஜகான்...



அவன் கரங்கள்

பற்றியபடியே

அவன் கண்முன்னே

கலைந்தது மும்தாஜ்

எனும் நிலவு

கனவாய்....



மும்தாஜ் எனும்

உயிர் பறவை

ஷாஜகான் எனும்

கூட்டைவிட்டு

வெகுதூரம் பறந்திருந்தது...



மன்னனின்

கண்ணீர்த் துளிகள்

நிலமெங்கும்

தீட்டின

மும்தாஜின்

அழகு முகத்தை....



வார்த்தைகள் இல்லாத

மௌனத்தில்

முழுகிக் கிடந்தான்

வருடங்களில் இன்பம்

தொலைத்த ஷாஜகான்....



காதலின் நினைவுகள்

கண்ணீரானது

கண்ணீரின் நினைவுகள்

கற்பனையானது...

கற்பனைகள்

நிஜங்களாய் நிமிர்ந்தன

மன்னனின் மனதில்...



இடைவேளை இல்லா

மும்தாஜின் நினைவுகள்

அளவீடு இல்லா

அழகுடன் உருவெடுத்தது

மன்னனின் மனதில்...



புதைக்கப்பட்டு

மாதங்களான

மும்தாஜின் பூத உடல்

பூ உடலாய்

வந்திறங்கியது

யமுனைக் கரையில்...



தொடங்கியது

ஷாஜகானின் காதலின்

மூன்றாம் அத்தியாயம்

ஒரு சுபநாளில்...



நீரின் துளிகளை

பாலில் பிரித்தெடுக்கும்

அன்னமானான் அரசன்...



சிறந்த கலைஞர்தேடி

நாடெங்கிலும்

உலகெங்கிலும்

நடந்து கொண்டுவந்தனர்

நிபுணர்களை

யமுனையின் நீரோடும்

ஆக்ராவிற்கு...



நிழலின் வடிவாய்

நிறைந்து கிடந்த

தாஜ்மகால்

நிஜமாய் வளர்வது கண்டு

நீந்திக் களித்தன

யமுனையின் மீன்கள்...





காதல் கலைஞன் ஷாஜகான் - 4

***********************************************



தாஜ்மஹாலை

கற்பனை செய்தவன்

பூமியிலிருந்து வரவில்லை

இந்த வரைபடம்

சொர்க்கத்திலிருந்து

வந்தது என்றான்

மன்னன்...



ஆம் மும்தாஜ்

எனும் சொர்க்கத்திலிருந்து

வந்தது...



முத்துக்களையும்

ரத்தினங்களையும்

பொதித்தான்

தாஜ்மஹால் சுவற்றில்

அவன் மனதில்

பொதிந்துகிடக்கும்

மும்தாஜ் எனும்

உயரிய வைரத்தின்

நினைவாய்....



இருபது ஆண்டுகள்

உழைக்க உழைக்க

மெல்ல

எழுந்து நின்றது

அந்த காதல் அதிசயம்....



இப்படியும் காதலிக்க

எவனிருக்கிறான்

இந்த உலகில்

என்ற ஆச்சர்யத்தை

மனதில் விதைக்க...



பின்னாளில்

சிறைக் கம்பிகளுக்குப்பின்

உயிர்விட்ட ஷாஜகான்

கடைசியாய்

பார்த்தபடி

இறந்துகிடந்தான் தாஜ்மஹாலை.....



ஈடுசெய்ய முடியா

அந்த உலகக் காதலனின்

நினைவுகள் சுமந்தபடி

நீந்தி வருகின்றன

யமுனையின் அலைகள்...



தாஜ்மஹாலின்

வெண்பளிங்கு மேனி

வருடி

பின் மெதுவாய்

நகர்ந்துபோகிறாள் யமுனை...



அந்த மாபெரும்

காதல் வரலாற்றுக்கு

தன் அலைகளால்

சலாம் செய்தபடி...

No comments: